தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை - ஆகஸ்ட் முதல் அமல்!

புதுச்சேரி மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைந்து வருவதால் 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடைவிதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டதோடு, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்பவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றது. சில நாள்களுக்கு முன்பு தமிழகத்தின் அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்பவர்கள், அதை விற்கும் மொத்த விற்பனையாளர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் பெட்டிக்கடைகள் என யார் விற்றாலும் அவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவெடுக்கப்பட்டது.
பிளாஸ்டிக்
அதேபோல புதுச்சேரியிலும் தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து கடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்க முடிவுசெய்யப்பட்டது. ஆனால், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் கால அவகாசம் கேட்டதையடுத்து, ஜூன் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடைச்சட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அப்படி அமல்படுத்தப்படாததால் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களிடம் இருந்து அரசுத் தரப்பில் பணம் பெற்றுக் கொண்டதால்தான் சட்டத்தை அமல்படுத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
நெகிழி


இந்த நிலையில், அமைச்சர் கந்தசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து அதிகாரிகள் மற்றும்  பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது ஒரு சில பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கக் கூடாது என்று உற்பத்தியாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட அமைச்சர் கந்தசாமி, ``தமிழகத்தில் எந்த வகையான பொருள்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறதோ அதற்கு மட்டும் புதுச்சேரியிலும் விலக்கு அளிக்கப்படும். ஒட்டுமொத்தமாக விலக்கு அளிக்க முடியாது. காரணம் நீர் நிலைகள், வாய்க்கால்கள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களில் பிளாஸ்டிக் பொருள்கள் அடைத்துக்கொள்கிறது. அதனால் பொதுமக்களும், விவசாயிகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
நீர் நிலைகள்
எனவே, இந்த முறை கண்டிப்பாக நடவடிக்கை இருக்கும். இதற்கு மேலும் கால அவகாசம் வழங்க முடியாது. விரைவில் இது தொடர்பாக அரசாணை வெளியிடப்படும். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருப்பாதால் அமைச்சரவை உடனடியாக முடிவுகளை எடுக்க முடியாது. எனவே, மீண்டும் இதுகுறித்து அமைச்சரவையில் விவாதித்து தடையை அமல்படுத்துவோம். இதற்காகத் தனியாக பறக்கும்படைகள் அமைக்கப்பட உள்ளது. அதில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சி, காவல்துறை, சுற்றுச்சூழல்துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும். ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்படும். அதேபோல உரிமம் பெறாமலும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருவது தெரியவந்திருப்பதால் நாளை முதலே நடவடிக்கை தொடங்கும். தங்கள் பகுதியில் செயல்படும் இப்படியான தொழிற்சாலைகள் குறித்து பொதுமக்களும் புகார் தெரிவிக்கலாம்” என்றார்.

Comments

Popular posts from this blog

Russia Launches Spektr-RG

National Centre for Good Governance (NCGG)

POCSO Act