வடகொரியாவில் கால்பதித்த முதல் அமெரிக்க அதிபர்! - எல்லையில் நிகழ்ந்த ட்ரம்ப் - கிம் சந்திப்பு

வடகொரியாவில் கால்பதித்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை டொனால்ட் டிரம்ப் பெற்றார்.


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன்னை அந்நாட்டு எல்லையில் சந்தித்துப் பேசினார்.
அணுஆயுதச் சோதனைகளால் உலக நாடுகளை அச்சுறுத்திவந்த வடகொரியா மீது, உலக நாடுகள் பலவும் பொருளாதாரத் தடை விதித்திருந்தன. கொரியப் போருக்குப் பின்னர் தென்கொரியாவுடன் மோதல் போக்கைக் கடந்துவந்த வடகொரியா, அந்நாட்டை மிரட்டும் தொனியில் அடிக்கடி அணுஆயுதச் சோதனையில் ஈடுபட்டுவந்தது. இதனால், உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த வடகொரியா, சமீபத்தில் சமாதானப் பேச்சுக்கு இறங்கிவந்தது. முதல் படியாக, தென்கொரிய அதிபர் மூன் ஜியே இன்-னை அந்நாட்டு எல்லைக்கே சென்று கிம் ஜாங் உன் சந்தித்தது உலக நாடுகளின் வரவேற்பைப் பெற்றது. அதன்பின், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், இரண்டு முறை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புகளை அடுத்து அணு ஆயுதங்கள் உற்பத்தியை நிறுத்த உள்ளதாகவும் வடகொரியா அறிவித்தது.

இந்தநிலையில், வடகொரியா - தென்கொரிய எல்லையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு நிகழ்ந்தது. இதையடுத்து, வடகொரியாவுக்குள் காலடி எடுத்து வைத்தார் ட்ரம்ப். இதன்மூலம், வடகொரியாவுக்குள் கால்பதித்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ட்ரம்ப் தனதாக்கினார். அவரை எல்லைக்கே வந்து வரவேற்ற கிம் ஜாங் உன், `இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு' என்றும் குறிப்பிட்டார். அதேபோல், வடகொரியாவில் ட்ரம்பை சந்திக்கும் நிகழ்வு நடைபெறும் என்று தாம் ஒருபோதும் எண்ணியதில்லை என்றும் கிம் ஜாங் உன் குறிப்பிட்டார்.

`உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த இடத்தில் நமது சந்திப்பு நிகழும் என்று எதிர்பார்க்கவில்லை' என்று கூறி ட்ரம்பை வடகொரியாவுக்குள் வரவேற்றார் கிம் ஜாங் உன். அதற்குப் பதிலளித்த ட்ரம்ப், வடகொரிய எல்லைக்குள் காலடி எடுத்துவைப்பது தமக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என்றார். அதேபோல், கிம் ஜாங் உன்னை வெள்ளை மாளிகைக்கு வருகைதருமாறும் அவர் அழைப்பு விடுத்தார். வடகொரியாவுக்கு வருகைதர முடிவு செய்த ட்ரம்ப்பைப் பாராட்டிய கிம் ஜாங் உன், இது தைரியமான மற்றும் உறுதியான செயல் என்று கூறி மகிழ்ந்தார். அதன்பின்னர் வடகொரியாவின் எல்லைப்பகுதியில் உள்ள Panmunjom கிராமத்தில் இரு தலைவர்கள் இடையே அதிகாரபூர்வ சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பு 50 நிமிடங்கள் வரை நீடித்தது.


முன்னதாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்-னை தென்கொரிய எல்லையில் சந்தித்துப் பேசிய ட்ரம்ப் எல்லைப் பகுதியில் உள்ள கண்காணிப்பு மையத்தையும் பார்வையிட்டார். அப்போது பேசிய ட்ரம்ப், சிங்கப்பூரில் வடகொரிய அதிபரை முதல்முறையாக சந்திக்கும் முன்னர் பல்வேறு எதிர்மறையான விமர்சனங்கள் வந்ததாகக் குறிப்பிட்டார். மூன்றாவது முறையாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திப்பது குறித்து பேசிய அவர், தங்களது முதல் சந்திப்புக்குப் பின்னர் ஆபத்துகள் அனைத்தும் நீங்கிவிட்டதாகவும் தீர்வுகளை நோக்கிய பாதையில் சந்திப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
ஜப்பானில் சமீபத்தில் முடிந்த ஜி20 நாடுகள் உச்சி மாநாட்டில் வடகொரியா பிரச்னை குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. வடகொரியாவின் அணு ஆயுதங்களால் கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்தும் ஜி20 நாடுகளின் தலைவர்கள் கவலை தெரிவித்தனர்.
இந்தநிலையில், ட்ரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு வடகொரியாவை அணு ஆயுதங்களை கைவிடும் முடிவில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் என்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

Russia Launches Spektr-RG

National Centre for Good Governance (NCGG)

POCSO Act